மதுரை-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை பணிகள் 2021-ம் ஆண்டு முடிவடையும் புதிய கோட்ட மேலாளர் லெனின் தகவல்
மதுரை-நாகர்கோவில் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் வருகிற 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முடிவடையும் என்று மதுரை ரெயில்வே கோட்ட புதிய மேலாளர் லெனின் கூறினார்.
நெல்லை,
மதுரை ரெயில்வே கோட்ட மேலாளராக பணிபுரிந்து வந்த நீனு இட்டியேரா சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய ரெயில்வே கோட்ட மேலாளராக லெனின் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 25-ந் தேதி மதுரை கோட்ட மேலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களை ஆய்வு செய்ய அவர் முடிவு செய்தார்.
நேற்று சிறப்பு ரெயில் மூலம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தார். அங்குள்ள நடை மேடைகள், நடை மேம்பாலங்கள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் பயணிகளுக்கு உரிய வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மின் தூக்கிகள் அமைக்கும் பணியை, ரெயில் நிலையத்தில் உள்ள பழமையான கட்டிடங்கள், மோட்டார் சைக்கிள் ஸ்டாண்டு, நுழைவு வாசல்கள் உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் லெனின் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வழக்கமான ஆய்வுதான் நடத்தப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள், பயணிகளுக்கு ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா?, வாகன நிறுத்தம் ஆகியவை குறித்து ஆய்வு செய்துள்ளேன்.
மதுரை -வாஞ்சி மணியாச்சி, தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி -நாகர்கோவில் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் வாஞ்சி மணியாச்சி வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி முடிவடையும். வருகிற 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் மதுரை-நாகர்கோவில் வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்படும். பாளையங்கோட்டையில் மகாராஜ நகரில் அமைக்கப்படும் ரெயில்வே மேம்பால பணியில், ரெயில்வே துறை சார்ந்த பணி விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மதுரை கோட்ட ரெயில்வே பல்வேறு பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.