புதுச்சேரியில் பெண் குத்திக்கொலை; தொழிலாளி வெறிச்செயல்

புதுவையில் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2019-04-27 22:15 GMT

புதுச்சேரி,

புதுவை குமரகுருபள்ளத்தை சேர்ந்தவர் கீதா (வயது 35). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர் கணவனை பிரிந்தார்.

இதைத்தொடர்ந்து கீதா சாரம் ஜெயராம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு தட்டுவண்டி தொழிலாளியான ஆனந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

திருமணமான ஆனந்த் அவ்வப்போது கீதாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் கீதாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதை தாங்க முடியாமல் கீதா அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். இருந்தபோதிலும் அவரை விடாமல் துரத்திவந்த ஆனந்த் கத்தியை எடுத்து கீதாவை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் கழுத்து, நெஞ்சு பகுதிகளில் பலத்த காயம் அடைந்த கீதா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைத்தொடர்ந்து ஆனந்த் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் கீதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தனர். ஆனால் அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கோரிமேடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையான கீதாவின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தப்பியோடிய ஆனந்தை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். தற்போது ஆனந்த் போலீஸ் பிடியில் சிக்கியிருப்பதாக தெரிகிறது. அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்