4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனை

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2019-04-27 23:00 GMT
பெரம்பலூர்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ந் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற மே மாதம் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அந்த தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் கடந்த 24-ந் தேதி முதல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளான சரஸ்வதி, மாயகிருஷ்ணன், புகழேந்தி பெருமாள் ஆகியோர் தலைமையிலான 3 பறக்கும் படையினரும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளான மஞ்சுளா, பழனிச்செல்வன், சக்திவேல் ஆகியோர் தலைமையிலான 3 பறக்கும் படையினரும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும் என சுழற்சி முறையில் 24 மணி நேரம் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் இந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நின்று, அந்த வழியாக வரும் வாகனங்களை மறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்