ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டுநீர்–தெளிப்புநீர் பாசனம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் மானியத்தில் அமைக்கப்பட உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-27 22:30 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

தற்போது உள்ள மழையில்லா கால கட்டங்களில் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கும் பகுதிகளில் நுண்ணீர் பாசனம் அமைக்கலாம். இவ்வாறு அமைப்பதன் மூலம் பெருமளவில் நீரை சேமித்து கூடுதல் பரப்பில் பாசனம் மேற்கொள்ள இயலும். குறைந்த நீரில் அதிக பரப்பில் பயிர் சாகுபடியை மேற்கொண்டு அதிகமான உற்பத்தியை பெறலாம்.

செடிகளின் வேர் பகுதிகளில் மட்டும் நீர் பாய்ச்சுவதால் களைச்செடிகள் வளர்வது கட்டுப்படுத்தப்படுகிறது. ஓரக்கசிவு, உறிஞ்சுதல் மூலம் ஏற்படும் நீரிழப்பு குறைகிறது. தென்னை, கரும்பு, மக்காச்சோளம், பருத்தி, பயறு சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் தகுந்த ஆவணங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை அணுகினால் மானியத்தில் சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் அமைத்து தரப்படும். சிறு மற்றும் குறு விவசாயிகள் 75 சதவீத மானியத்தில் பயன் பெறலாம்.

சொட்டுநீர் பாசனம் அமைக்க ஆர்வம் உள்ள விவசாயிகள் நில ஆவணங்கள், அதாவது கணினி 10(1) அசல், நில வரைபடம், கிராம நிர்வாக அலுவலர் அடங்கல், சிறு குறு விவசாயிக்கான அசல் சான்று, நீர் ஆதாரம் மற்றும் மின் இணைப்பு விவரம், புகைப்படம், மண் மற்றும் நீர் மாதிரி பரிசோதனை அட்டை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திட வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் நடப்பாண்டு 46.76 லட்சம் ரூபாய் நிதி இலக்கு வழங்கப்பட்டு உள்ளதால் முன்னுரிமை அடிப்படையில் சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து தரப்படுகிறது.

இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்