நீர் ஆதாரங்கள் வறண்டுவிட்ட நிலையில் விருதுநகரில் குடிநீர் வினியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? நகராட்சி நிர்வாகம் பாராமுகம்

விருதுநகரில் குடிநீருக்கான நீர் ஆதாரங்கள் வறண்டுவிட்ட நிலையில் குடிநீர் வினியோகத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் பராமுகமாகவே உள்ளது.

Update: 2019-04-27 22:15 GMT

விருதுநகர்,

விருதுநகர் நகராட்சிப் பகுதியின் குடிநீர் தேவைக்கு நிலத்தடி நீர் ஆதாரங்களாக ஆனைக்குட்டம் அணை, காரிசேரி கல்குவாரி, ஒண்டிப்புலி கல்குவாரி, சுக்கிரவார்பட்டி நீர் தேக்கம் ஆகியவை இருந்து வருகிறது. இது தவிர தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமும் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. கோடை வெயில் கடுமையாக உள்ளதால் நிலத்தடி நீர் ஆதாரங்கள் வறண்டுவிட்ட நிலையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்தும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் 40 சதவீதம் தான் குடிநீர் கிடைத்து வருகிறது.

கடந்த காலங்களில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னர் விருதுநகர் நகராட்சி பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரத்தைக் கொண்டு 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் கோடை காலத்திலும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் கிடைத்து வரும் நிலையிலும் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் இடைவெளியில்தான் குடிநீர் வினியோகம் செய்யப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் வினியோக முறையினை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாகவே உள்ளது.

விருதுநகரில் குடிநீர் வினியோக திட்டத்தை புணரமைக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவுப்படி ரூ.21 கோடி மதிப்பீட்டில் தனியார் நிறுவனத்தின் மூலம் புணரமைப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தினை அமலுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மேலும் நகராட்சி பகுதியில் 90–க்கும் மேற்பட்ட வினியோக மண்டலங்கள் இருப்பதால்தான் வினியோக நாட்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக சுட்டிகாட்டிய நிபுணர்கள் வினியோக மண்டலத்தை குறைக்க அறிவுறுத்தினர். ஆனால் வினியோக மண்டலத்தை குறைக்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து நகராட்சி நூற்றாண்டு விழா சிறப்பு நிதியில் இருந்து 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் நகரின் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தடையில்லாமல் வினியோகம் செய்ய வாய்ப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திட்டமிட்டப்படி இந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வில்லை. நகராட்சி நிர்வாகமும் இதற்கான முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல் பாராமுகமாகவே உள்ளது.

எனவே நீர் ஆதார வறட்சி குடிநீர் பிரச்சினைக்கு காரணமாக இருந்தாலும், குடிநீர் வினியோக நடைமுறையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை முறையாக பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். கோடை கால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளதாக அறிவித்த போதிலும் நடைமுறையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

விருதுநகரில் சில பகுதிகளில் 15 நாட்களுக்கு மேல் ஆகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என நகர் மக்கள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாக ஆணையர், விருதுநகரில் குடிநீர் வினியோகத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிடுவதோடு, மண்டல இயக்குனர் மூலம் அதனை முறையாக கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்