சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-27 22:30 GMT

ராமநத்தம்,

ராமநத்தம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் அவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோ‌ஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்