திருப்பூர் மாவட்டத்தில் ‘பானி’ புயல் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள்; கலெக்டர் அறிவுரை

திருப்பூர் மாவட்டத்தில் ‘பானி’ புயல் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

Update: 2019-04-27 22:30 GMT

திருப்பூர்,

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ‘பானி’ புயலாக வலுப்பெற்று மாறிட வாய்ப்பு உள்ளதாகவும், அந்த புயலானது தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது திருப்பூர் மாவட்டத்தில் மழை, இடி மற்றும் மின்னல் தாக்குதலின் போது பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

அதன்படி புயல் எச்சரிக்கை குறித்து தொலைக்காட்சிகள், வானொலிகள், செய்தித்தாள்கள் போன்றவற்றின் மூலம் அறிந்து கொண்டு பொதுமக்கள் பயமின்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்புடனும், மழை பெய்யும்போது திறந்த வெளியில் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள பாதுகாப்பான கட்டிடங்கள் அல்லது அரசு முகாம்கள் போன்ற பகுதிகளுக்கு சென்று ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

ஆறு, குளம், கால்வாய் போன்ற மழைநீர் செல்லும் பாதைக்கு அருகே வசித்து வரும் பொதுமக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். அதுபோல் நீர் நிலைகளில் குளிப்பது, துவைப்பது போன்ற செயல்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை நீர் நிலைகளுக்கு குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ அனுமதிக்கக்கூடாது.

தமிழ்நாடு பேரிடர் துயர் குறைப்பு முகமை மூலமாக காலநிலைகள், வானிலை நிலையங்கள், மழைப்பொழிவுகள் உள்ளிட்ட தகவல்களை பெறும் வகையில் தமிழக அரசினால் TNSMART என்ற பெயரில் செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை அனைத்து பொதுமக்களும் தங்களது ஆன்ட்ராய்டு செல்போனில் https://play.google.com/store/apps/details?id=int rimes.tnsmart என்ற செயலியின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்தி இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிடும் அதிகாரபூர்வ பேரிடர் விழிப்புணர்வு அறிக்கைகள், மழை, வெள்ளம், புயல் மற்றும் வெயில் போன்ற காலநிலைகள் குறித்தும், மழைப்பொழிவு நிலவரம், மழையினால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் செயற்கைகோள் புகைப்படங்கள் போன்றவை குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

பொதுமக்கள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி ‘பானி’ புயல் காலத்தில் மழை, இடி மற்றும் மின்னல் தாக்குதல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்