பல்லடம் அருகே மொபட் மீது கார் மோதி விபத்து; மளிகை கடை வியாபாரி பலி
பல்லடம் அருகே மொபட் மீது கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மொபட்டில் சென்ற மளிகை கடை வியாபாரி பலியானார். காரில் வந்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
பல்லடம்,
பல்லடம் அருகே உள்ள நல்லூர்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 57). இவர் அந்த பகுதியில் மளிகை கடை, டீக்கடை வைத்து நடத்தி வந்தார். அத்துடன் கோழி வியாபாரமும் செய்து வந்தார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும் (50), கதிர்வேல் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை வியாபாரி மயில்சாமி வியாபாரம் சம்பந்தமாக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அவர் பல்லடம் –திருச்சி மெயின் ரோட்டில் உள்ள மாதப்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது கோவையில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த ஒரு கார் இவரது மொபட்டின் பின்னால் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மயில்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அத்துடன் அந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த கோவை கே.கே.புதூர் ரத்தினசபாபதி வீதியை சேர்ந்த சீனிவாசன் (28), 4 பெண்கள், ஒரு குழந்தை ஆகிய 6 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார்கள். அவர்கள் காரில் ‘சீட் பெல்ட்’ அணிந்திருந்ததால் உயிர்தப்பியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் விபத்தில் பலியான மயில்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து மயில்சாமியின் மகன் கதிர்வேல் பல்லடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.