பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்ததால் டணாய்க்கன் கோட்டை வெளியே தெரிகிறது

பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்ததால் அணையின் உள்பகுதியில் உள்ள டணாய்க்கன் கோட்டை வெளியே தெரிகிறது.

Update: 2019-04-27 22:30 GMT

புஞ்சைபுளியம்பட்டி,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி வரும் மோயாறு கலக்கும் இடத்தில் பவானிசாகர் அணை கட்டப்பட்டு உள்ளது. கடந்த 1948–ம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. அப்போது அணை நீர்த்தேக்க பகுதியில் இருந்த வடவள்ளி, பீர்கடவு, பட்டரமங்கலம் உள்பட 5 கிராம மக்களுக்கு பண்ணாரி வனப்பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.

அதுமட்டுமின்றி அணை நீர்த்தேக்க பகுதியில் டணாய்க்கன் கோட்டை என்றழைக்கப்படும் 800 ஆண்டுகள் பழமையான மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மங்களாம்பிகை கோவில், பீரங்கி தட்டு ஆகியவை அப்படியே விடப்பட்டன. ஆனால் அந்த கோவில்களில் இருந்த சாமி விக்கிரகங்கள் பத்திரமாக எடுக்கப்பட்டன. பின்னர் அந்த விக்கிரகங்கள் அனைத்தும் பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலின் வலதுபுறத்தில் கட்டப்பட்ட கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைப்பகுதியில் நீர் தேக்கப்பட்டதால் டணாய்க்கன் கோட்டை, மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மங்களாம்பிகை கோவில், பீரங்கி தட்டு ஆகியவை மூழ்கின. மேலும் கிராமங்கள் இருந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. ஆனால் நீர்மட்டம் குறையும் போது டணாய்க்கன் கோட்டை கம்பீரமாக காட்சி அளிக்கும்.

தற்போது அணையின் நீர்மட்டம் 52.58 அடியாக உள்ளது. இதன்காரணமாக அணையில் நீர் தேங்கி இருந்த பகுதியில் உள்ள டணாய்க்கன்கோட்டை மற்றும் அதில் உள்ள மாதவராய பெருமாள் கோவில் வெளியே தெரிகிறது. இன்னும் 12 அடி நீர்மட்டம் குறைந்தால் சோமேஸ்வரர் மங்களாம்பிகை கோவில் மற்றும் பீரங்கி திட்டு முழுவதுமாக தெரியும்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘800 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த கோவில்களின் கல்வெட்டுகளை தொல்லியல் வல்லுனர்கள் ஆராய்ந்தால் மேலும் தகவல்கள் தெரிய வாய்ப்பு உள்ளது. மேலும் அணை நீர்த்தேக்க பகுதியில் உள்ள இந்த கோவில்களை பொதுமக்கள் சென்று பார்க்க வசதி இல்லை.

எனவே அணையின் நீர்மட்டம் குறையும் காலங்களில் இந்த கோவில்களை காண பொதுப்பணித்துறையினர் படகு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்,’ என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்