அவதூறு ஆடியோ வெளியிட்ட வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

பொன்னமராவதி கலவரத்திற்கு காரணமான அவதூறு ஆடியோ வெளியிட்ட வழக்கில் மேலும் ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-04-27 23:00 GMT
புதுக்கோட்டை,

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த ஆடியோவில் உள்ள 2 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி கடந்த 18-ந் தேதி இரவு அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் 19-ந் தேதி காலையில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அவதூறாக பேசிய ஆடியோ வெளியிட்ட 2 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை மீண்டும் முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் பொன்னமராவதியில் பயங்கர கலவரம் வெடித்தது. இதில் 6 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் 3 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பொன்னமராவதி தாலுகா பகுதிக்கு மட்டும் 19-ந் தேதி முதல் 21-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறபித்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கிடையில், பொன்னமராவதி திருக்களம்பூர் கருப்புக்குடிப்பட்டியை சேர்ந்த கருப்பன் என்பவர் அவதூறாக பேசும் ஆடியோ வெளியிட்ட 2 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி பொன்னமராவதி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோ, அன்பழகன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவதூறு ஆடியோ வெளியிட்டவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மஞ்சவயல் கரிசல்காடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் செல்வக்குமார் (வயது 34) என்பவர் சிங்கப்பூரில் இருந்து அவதூறு ஆடியோவை வெளியிட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரவழைத்து கடந்த 25-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை புதுக்கோட்டைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் வசந்த் (30) என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவு திருமயம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் செல்வக்குமார் தனிப்படை போலீசாரிடம் கொடுத்த தகவலின் பேரில், சிங்கப்பூரில் இருந்து நேற்று விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த புதுக்கோட்டை அருகே உள்ள நெறிஞ்சிப்பட்டியை சேர்ந்த முனியன் மகன் சத்தியராஜ் (வயது 30) என்பவரை தனிப்படை போலீசார் திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை புதுக்கோட்டைக்கு கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சத்தியராஜ் அவதூறு ஆடியோ வெளியிட்ட நபரில் இவரும் ஒருவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து தனிப்படை போலீசார் சத்தியராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் முடிவில் இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்