தக்கலை அருகே டெம்போ கவிழ்ந்து 7 பேர் படுகாயம்

தக்கலை அருகே டெம்போ கவிழ்ந்து 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-04-27 22:45 GMT
பத்மநாபபுரம்,

தக்கலை அருகே புதுவீடு பகுதியை சேர்ந்தவர் ஜினோ (வயது 31). டெம்போ டிரைவர். இவர் நேற்று வெள்ளிக்கோடு பகுதியில் இருந்து டெம்போவில் சிமெண்டு மூடைகளை ஏற்றி கொண்டு ஆரல்வாய்மொழி நோக்கி புறப்பட்டார்.

இதில் சிமெண்டு மூடையின் மேல்பகுதியில் 3 பேரும், ஜினோ இருக்கை அருகே அமர்ந்தபடி 3 பேரும் பயணம் செய்தனர். நந்தவனத்துவிளை அருகே டெம்போ சென்றது. அப்போது முன்னே சென்ற அரசு பஸ்சை டெம்போ டிரைவர் ஜினோ முந்தி செல்ல முயன்றார்.

அப்போது திடீரென டெம்போ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பெட்ரோல் பங்க் முன்பு கவிழ்ந்தது. இந்த விபத்தில் டெம்போவில் பயணம் செய்த ஜினோ, கூட்டமாவு பகுதியை சேர்ந்த எட்வின்குமார், ஜான்சன், முளகுமூடு பகுதியை சேர்ந்த வின்சென்ட், தங்கப்பன், கோடியூர் லாசர், கப்பியறை தேவராஜ் ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல்சிகிச்சைக்காக எட்வின்குமார், வின்சென்ட், தங்கப்பன், லாசர் ஆகிய 4 பேர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்