இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ‘மெட்டல் டிடெக்டர்’ சோதனை

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் போலீசார் சோதனை நடத்துகிறார்கள்.

Update: 2019-04-27 23:00 GMT
கன்னியாகுமரி,

இலங்கையில் கடந்த 21–ந்தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 250–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். உலக நாடுகளை உலுக்கிய இந்த சம்பவத்தை அரங்கேற்றிய பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணிகளில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து அண்டை நாடான இந்தியாவிலும் எச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ‘மெட்டல் டிடெக்டர்‘ கருவி மூலம் தீவிர சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். கோவில் வாசலிலும் ‘மெட்டல் டிடெக்டர்’ வாயில் அமைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் பெரிய பை கொண்டு வந்தால், அதை வெளியே பாதுகாப்பு அறையில் வைத்து விட்டு வரும்படி போலீசார் அனுப்பி வைக்கிறார்கள்.

இதே போல் சுசீந்திரம் கோவிலிலும் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் சோதனை நடத்திய பிறகே பக்தர்கள் கோவில் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்