கோவில்வெண்ணியில் சாலை மறியலில் ஈடுபட்ட முத்தரையர் சங்கத்தினர் 140 பேர் மீது வழக்கு
கோவில்வெண்ணியில் சாலை மறியல் ஈடுபட்ட முத்தரையர் சங்கத்தினர் 140 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீடாமங்கலம்,
குறிப்பிட்ட சமுதாயம் குறித்து சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியிடப்பட்டதை கண்டித்து நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் முத்தரையர் சங்கத்தினர் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.
மறியல் காரணமாக நீடாமங்கலம்-தஞ்சாவூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முத்தரையர் சங்க நிர்வாகி ராஜதுரை உள்பட 140 பேர் மீது நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.