ஹெல்மெட்டுடன் ஸ்கூட்டரில் சென்று பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருச்சி வாலிபர் கைது - 20 பவுன் சங்கிலி மீட்பு

ஹெல்மெட்டுடன் ஸ்கூட்டரில் சென்று பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருச்சி வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-26 23:14 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து தங்க செயினை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் அறிவுரைப்படி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன், ஏட்டுகள் மோகன்தாஸ், ராஜேஷ் கண்ணா, சிவபாலசேகர், கவுதமன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தஞ்சை நகரில் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சில கண்காணிப்பு கேமராக்களில் ஒரே ஸ்கூட்டரில் விதவிதமான உடைகளை அணிந்து வாலிபர் ஒருவர் ஹெல்மெட்டுடன் வந்து செல்வது பதிவானது. அந்த காட்சியில் பதிவான நபரை பிடிக்க வேண்டும் என தீவிர வாகன சோதனையில் ஆங்காங்கே போலீசார் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்கூட்டரில் வாலிபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் அழைத்து விசாரணை நடத்தியபோது அவர் தான், விதவிதமான உடைகளுடன் கண்காணிப்பு கேமராக்களில் ஏற்கனவே பதிவாகி இருந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும் அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் தங்க சங்கிலி இருந்தது. இந்த தங்க சங்கிலி குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் தான் தமிழ்ப்பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 5 பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது.

மேலும் அவர் திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திராபுரம் அண்ணாநகரை சேர்ந்த அந்தோணிசாமி மகன் பிராங்கிளின் குமார்(வயது31) என்பதும், தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஈஸ்வரிநகரில் வாடகைக்கு வீடு எடுத்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிராங்கிளின் குமாரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 20 பவுன் சங்கிலியையும், ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்