மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ரேஷன் கடை பெண் ஊழியரிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கும்பகோணம் அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ரேஷன் கடை பெண் ஊழியரிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-04-26 23:14 GMT
கும்பகோணம், 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வட்டி பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கபிர்தாசன். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (வயது 45). இவர் ரேஷன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சாந்தி தனது மகன் சந்திரமோகனுடன் கும்பகோணம் பஸ் நிலையத்திலிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களின் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து 2 மர்ம நபர்கள் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

கும்பகோணம் வட்டிபிள்ளையார் கோவில் அருகே இவர்கள் சென்ற போது இவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென சாந்தி சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். இதனால் சாந்தியும் அவருடைய மகனும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அவர்கள் சுதாரிப்பதற்குள் மர்ம நபர்கள் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

மர்ம நபர்கள் சங்கிலியை பறித்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து சாந்தி கீழே விழுந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சாந்தி கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனால் இரவு நேரத்தில் பணிக்கு சென்று விட்டு வரும் பெண்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே கும்பகோணம் பகுதியில் போலீசார் ரோந்து பணியை துரிதப்படுத்தி சங்கிலி பறிப்பில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

மேலும் செய்திகள்