மும்பையில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் நாளை மறுநாள் வாக்குப்பதிவு
மும்பையில் உள்ள 6 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது.
மும்பை,
மராட்டியத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் மூன்று கட்டமாக 31 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இறுதிக்கட்டமாக மீதமுள்ள 17 தொகுதிகளில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.
மும்பையில் உள்ள தென்மும்பை, தென்மத்திய மும்பை, வடக்கு மும்பை, வடமத்திய மும்பை, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை ஆகிய 6 தொகுதிகளும் அடங்கும்.
இந்த 6 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 116 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஆறு தொகுதிகளிலும் மொத்தம் 94 லட்சத்து 58 ஆயிரத்து 397 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 51 லட்சத்து 60 ஆயிரத்து 226 பேர் ஆண்கள். 42 லட்சத்து 97 ஆயிரத்து 585 பேர் பெண்கள். 586 பேர் மூன்றாம் பாலினத்தவர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மொத்தம் 1,728 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஏற்பாடுகள் தீவிரம்
இறுதிக்கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள், முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்வதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாடு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்திட உதவும் விவிபாட் எனப்படும் ஒப்புகைச்சீட்டு எந்திரங்கள், அழியாத மை உள்ளிட்ட தேர்தலில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
நேற்று வாக்குச்சாவடி பகுதிகளில் 100 மீட்டர் தூர எல்லைக் கோடுகள் வரையப்பட்டன. தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும், இறுதிக் கட்டத்தில் நடைபெறும் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு பகுதிகளில் போலீசாரின் கொடி அணிவகுப்பும் நடைபெற்று வருகிறது.