ஹாசனில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற தனியார் சொகுசு பஸ் மீது லாரி மோதியது; 15 பேர் படுகாயம்

ஹாசனில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற தனியார் சொகுசு பஸ் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2019-04-26 22:30 GMT
ஹாசன்,

ஹாசனில் இருந்து நேற்று காலை பெங்களூரு நோக்கி தனியார் சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ், ஹாசன் புறநகர் சாலையில் (பைபாஸ் ரோடு) பஸ்தேனஹள்ளி பகுதியில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பஸ், சாலை தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு மறுபுறம் உள்ள சாலைக்கு சென்றது.

அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று தனியார் சொகுசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதியும், பஸ்சின் பின்பகுதியும் அப்பளம் போல நொறுங்கின.

15 பேர் படுகாயம்

இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் உள்பட 15 பேர் படுகாய மடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஹாசன் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் ஹாசன்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், விபத்துக்குள்ளான தனியார் சொகுசு பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

இதுகுறித்து ஹாசன் படாவனே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்