கே.ஆர்.நகர் டவுனில் துணிகரம் அரசு அதிகாரி உள்பட 3 பேரின் வீடுகளில் திருட்டு
மைசூருவில் அரசு அதிகாரி உள்பட 3 பேரின் வீடுகளில் துணிகர திருட்டு நடந்துள்ளது. அதாவது வீடுகளின் உரிமையாளர்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற போது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
மைசூரு,
மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் டவுனை சேர்ந்தவர் கிரீஸ். இவர் கே.ஆர்.நகர் தாலுகா அலுவலகத்தில் கணக்கு தணிக்கை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டினுள் இருந்த பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
தனியார் பள்ளி ஆசிரியர்
மேலும் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியரான தினேசும், தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், தினேசின் வீட்டினுள் புகுந்து ரூ.1 லட்சம் ரொக்கம், 80 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டனர்.
அத்துடன் தினேசின் பக்கத்துவீட்டில் வசித்து வந்த சேகர் என்பவர் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற போது, அவரது வீட்டிலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அவரது வீட்டில் ரூ.15 ஆயிரம் ரொக்கம், 48 கிராம் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணை
இதுதொடர்பாக 3 பேர் கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.நகர் டவுன் போலீசார் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது 3 வீடுகளின் உரிமையாளர்களும் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற போது இந்த துணிகர திருட்டு நடந்துள்ளது தெரியவந்தது. மேலும் 3 பேரின் வீடுகளிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீசார் அறிவுரை
இதற்கிடையே கே.ஆர்.நகர் போலீசார், கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலா செல்பவர்கள், தங்களது பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லும்படி அறிவுரை வழங்கியுள்ளனர்.