கும்மிடிப்பூண்டி அருகே பார் ஊழியரை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு 4 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே பார் ஊழியரை கத்தியால் வெட்டி பணம் பறித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த உப்பரபாளையம் கிராமம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 52). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாம் வழியாக கும்மிடிப்பூண்டி பஜாருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். முகாமில் ரெயில்வே கேட்டையொட்டிய மைதானம் அருகே நடந்து வரும்போது அங்கு 4 கார்களில் சிலர் அமர்ந்து இருந்தனர். அவர்கள் உருட்டுக்கட்டைகளை கைகளில் வைத்துக்கொண்டு ஜெயபாலை வழிமறித்து அவரை கத்தியால் வெட்டி அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஜெயபால், சத்தம் போட அங்கு இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் அவர்கள் தப்பிச்சென்று விட்டனர். இந்த தாக்குதலில் லேசான காயம் அடைந்த ஜெயபால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார் ஊழியரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட காயலார்மேடு கிராமத்தை சேர்ந்த மதன் (வயது 25), பெத்திக்குப்பத்தை சேர்ந்த மதுரை முத்து (26), சத்யா (26) மற்றும் முகாமை சேர்ந்த கிருபா என்ற கனகசபை (32) ஆகியோரை கைது செய்தனர். 4 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் மேலும் 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.