மாணவிகளுக்கு சான்றிதழ் கொடுக்க மறுப்பு: நெல்லையில் நர்சிங் பள்ளி நிர்வாகி கைது

மாணவிகளுக்கு சான்றிதழ் கொடுக்க மறுத்ததாக நெல்லையில் நர்சிங் பள்ளி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.;

Update: 2019-04-26 21:45 GMT
நெல்லை,

நெல்லை கொக்கிரகுளத்தில் தனியார் நர்சிங் பயிற்சி பள்ளி உள்ளது. இதனை கொக்கிரகுளம் வசந்தம் நகரை சேர்ந்த சரவணகுமார் (வயது 41) என்பவர் நடத்தி வருகிறார். இந்த பயிற்சி பள்ளியில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளத்தை சேர்ந்த காளி என்பவருடைய மகள் புவனேசுவரி (20) படிப்பதற்காக சேர்ந்தார். இதற்காக கட்டணம் செலுத்தி, பிளஸ்-2 சான்றிதழையும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் புவனேசுவரிக்கு அந்த நர்சிங் பயிற்சி பள்ளி முறையாக செயல்படாதது தெரியவந்தது. இதையடுத்து பணம் மற்றும் சான்றிதழை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் சரவணகுமார் கொடுக்க மறுத்ததால், புவனேசுவரியின் தந்தை காளி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பல்வேறு மாணவிகளிடம் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு அதை திருப்பி கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று சரவணகுமாரை கைது செய்தனர்.

இதுதவிர பல்வேறு மாணவிகளின் பெற்றோர், பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கு படித்த மாணவிகளுக்கு சரியாக வகுப்புகள் நடத்தாததாகவும், மாணவிகளிடம் இருந்து பெறப்பட்டிருந்த பிளஸ்-2 அசல் சான்றிதழ்களை தர மறுப்பதாகவும் மாணவிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்