இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பலத்த பாதுகாப்பு
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
திருச்செந்தூர்,
இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250-க்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள். அண்டை நாடான இலங்கையில் நிகழ்ந்த அசம்பாவித சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவில் நுழைவுவாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பக்தர்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர். கோவில் வளாகம், கடற்கரை, விடுதிகள், மண்டபங்களில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் போலீஸ் மோப்ப நாய் மூலம் தீவிர சோதனை நடத்தினர்.
கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கோவில் புறக்காவல் நிலையத்தில் இருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.