தச்சு தொழிலாளி கொலையில் தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்
அரியாங்குப்பம் தச்சு தொழிலாளி கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டிவருகின்றனர்.
அரியாங்குப்பம்,
அரியாங்குப்பம் சண்முகம் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). தச்சு தொழிலாளி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவந்தார். கடந்த 25-ந் தேதி மதியம் நோணாங்குப்பம் தொடக்கப்பள்ளி முன்பு மோட்டார் சைக்கிளில் நாகராஜ் வந்தபோது, மர்ம கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தினர். நாகராஜ் கொலையில் அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த லோகு (30), அவரது தம்பி யுவராஜ் மற்றும் நண்பர்கள் சுப்பையாநகர் மணிகண்டன் (24), ராதா கிருஷ்ணன் நகர் உதயகுமார் (30), அருந்ததிபுரம் முத்துக்குமார் (38) மற்றும் ஒருவர் ஈடுபட்டது தெரியவந்தது.
புதுவை வேல்ராம்பட்டு ஏரி பகுதியில் பதுங்கியிருந்த லோகு, மணிகண்டன், உதயகுமார், முத்துக்குமார் ஆகிய 4 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் தீவிர விசாரணை நடத்தியதில் நாகராஜ் கொலைக்கான பரபரப்பு தகவல் தெரியவந்தது.
நோணாங்குப்பத்தை அடுத்த தமிழக பகுதியான இருசம்பாளையத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சந்திரன் கொலையில் ஈடுபட்டவர்களுக்கு நாகராஜ் பண உதவி செய்து வந்தார். இதுபற்றி சந்திரன் மகனின் நண்பரும், லோகு தம்பியுமான யுவராஜ், நாகராஜ் மனைவியின் தம்பியான தமிழ்பிரியனிடம் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் லோகுவுக்கும், நாகராஜிக்கும் மோட்டார் சைக்கிள் மோதியது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கொலை நடப்பதற்கு முதல்நாளும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே நாகராஜை தீர்த்துக்கட்ட லோகு, யுவராஜ் மற்றும் அவர்களின் நண்பர்கள் திட்டமிட்டு கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 4 பேரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜ் மற்றும் இன்னொருவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.