வடசென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை விசுவரூபம் எடுக்கும் குடிநீர் பிரச்சினை
குடிநீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துவரும் நிலையில், வடசென்னை பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை,
கடந்த ஆண்டு போதுமான அளவு மழை பெய்யாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் வராமல் நிரம்பவில்லை. இதனால் இந்த கோடையில் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 2 ஏரிகள் வறண்டுவிட்டன. பூண்டி ஏரியில் 222 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 161 மி.கனஅடியும், செம்பரம்பாக்கத்தில் 3 மி.கனஅடியும், சோழவரத்தில் 18 மி.கனஅடியும் மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. 4 ஏரிகளிலும் சேர்த்து 402 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
இதனால் சென்னை மாநகருக்கு ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைக்கு பதிலாக 550 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான தண்ணீர் வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டர், கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து 200 மி.லி., கல்குவாரிகளில் இருந்து 30 மி.லி., எஞ்சிய 140 மி.லி. பூண்டி, புழல் ஏரிகளில் இருந்தும் எடுக்கப்படுகிறது.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
வடசென்னை பகுதிகளான பெரம்பூர், திரு.வி.க.நகர், கொடுங்கையூர், கொளத்தூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு விசுவரூபம் எடுத்துள்ளது. இதேபோல தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வீடுகளிலும், தெரு குழாய்களிலும் போதுமான அளவு தண்ணீர் வராததால் பொதுமக்கள் லாரி தண்ணீரையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் லாரி தண்ணீர் தொடர்ந்து நிரப்பப்படுகிறது. தெருக்களில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் முறையாக நிரப்பப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நிலத்தடி நீர்மட்டம் சரிவு
பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தங்கள் வீடுகளில் ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கும் பணிகளில் இறங்கி உள்ளனர். இதனால் பெரும்பாலான இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளை அமைக்க ஆட்கள் கிடைப்பதில்லை.
ஒருசில அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்குழாய் கிணறுகள் 600 அடி ஆழம் வரை தோண்டினாலும் தண்ணீர் இருப்பதில்லை. வறட்சி காரணமாக சென்னை மாநகரில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. பலர் வீடுகளை காலி செய்துவிட்டு தண்ணீர் கிடைக்கும் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளை தேடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
மாதம் ரூ.30 ஆயிரம்
பல்லாவரம் அடுத்துள்ள அனகாபுத்தூரை சேர்ந்த முத்துராணி கூறியதாவது:-
எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக இங்குள்ள ஆழ்குழாய் கிணற்றில் கடந்த ஒன்றரை மாதமாக தண்ணீர் வரவில்லை. இதனால் லாரி தண்ணீரை தான் முழுமை யாக நம்பி உள்ளோம். குறிப்பாக 18 வீடுகளுக்கு மாதம் லாரி தண்ணீருக்காக மட்டும் ரூ.30 ஆயிரம் செலவிட வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
குடம் ரூ.10-க்கு விற்பனை
கொடுங்கையூரைச் சேர்ந்த மல்லிகா என்பவர் கூறியதாவது:-
தெருக்குழாயில் போதுமான அளவு குடிதண்ணீர் வராததால் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டியிருக்கிறது. அதுவும் சில நேரங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வருவதால் அதனை பயன்படுத்தி நோய்கள் ஏதாவது வந்துவிடப்போகிறது என்பதால் அந்த தண்ணீரை பிடிப்பதில்லை.
இதனால் லாரிகளில் கொண்டுவரப்படும் தண்ணீரை பிடித்துவந்தோம். தற்போது தனியார் லாரிகளில் கொண்டுவரப்படும் தண்ணீர் ஒரு குடம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சென்னை மாநகரில் ஆங்காங்கே அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அம்மா குடிநீர் நிலையங்களில் 25 லிட்டர் ரூ.6-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. சில பகுதிகளில் மினரல் வாட்டர் என்று கூறிக்கொண்டு சாதாரண தண்ணீரை குடம் ரூ.5-க்கும் விற்பனை செய்கின்றனர். அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.