ஜிப்மர் ஆஸ்பத்திரி எதிரே ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.

Update: 2019-04-26 22:45 GMT
புதுச்சேரி,

புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு எதிரே உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தை சுற்றிய பகுதிகளில் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையிலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குடியிருப்புக்கு பின்பகுதியில் உள்ள இடங்களையும் ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்பட்டன.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக காலியாக நகராட்சி வைத்திருந்த இடங்களையும் சிலர் ஆக்கிரமித்து பெரிய அளவில் கடைகளை நடத்தியதால் இதுகுறித்த புகார்கள் நகராட்சிக்கு வந்தன. மேலும் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்தவர்கள் உரிம காலம் முடிந்த பின்னரும் உரிமத்தை புதுப்பிக்காமல் கடைகளை நடத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. நேற்று காலையில் உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு பொக்லைன் எந்திரத்தோடு வந்தனர்.

ஆக்கிரமிப்பு கடைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றம் பணி தொடங்கியது. அவர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினார்கள். கடைகளுக்காக போடப்பட்ட இரும்பு கூரை தகடுகளை பெயர்த்து அவைகளை லாரியில் ஏற்றினார்கள். இதற்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டராமன், முருகவேலு தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அரசு இடத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த சுமார் 25 கடைகளை அவர்கள் அகற்றினார்கள்.

இதற்கிடையே கடைக் காரர்கள் என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவிக்கவே அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது புதுவையில் உள்ள எல்லா இடங்களிலும் இதேபோல் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? இதுதொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ.விடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதா? உரிமம் புதுப்பிக்கப்படாத கடைகளை அகற்றுவது என்றால் புதுவையில் இதேபோல் எத்தனையோ கடைகள் உரிமம் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. அந்த கடைகள் அகற்றப்படுமா? நேரு வீதி, பெரிய மார்க்கெட் பகுதியில் இதேபோல் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியுமா? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

அவரது கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஆணையர் கந்தசாமி, ஆக்கிரமிப்புகள் கடைகள் அகற்றப்படும் இடத்தில் வணிக வாளகம் கட்டப்பட உள்ளதாக பதில் அளித்தார். அதற்கான எஸ்டிமேட் தயாராகிவிட்டதா? நிதி உள்ளதா? அவ்வாறு கட்டப்படும் வணிக வளாகத்தில் ஏற்கனவே கடை வைத்துள்ளவர்களுக்கு இடம் வழங்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து பதில் வழங்கப்படவில்லை.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடர்ந்து தான் சாலைமறியலில் ஈடுபடப்போவதாக என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ. தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின்னரும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர்.

இதைத் தொடர்ந்து பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடுவது என்று வியாபாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ.வும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன்பின் முழுவதுமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும் செய்திகள்