மாநகராட்சியை கண்டித்து சாக்கடைக்குள் இறங்கி பொதுமக்கள் போராட்டம்
திருப்பூர் பவானிநகர் பகுதியில் சாக்கடை கால்வாயை தூர்வாராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாக்கடைக்குள் இறங்கி போராட்டம் நடத்தினார்கள்.
திருப்பூர்,
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது. பல்வேறு இடங்களில் குப்பைகள் முறையாக அள்ளப்படாமலும், சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமலும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் திருப்பூர் பவானிநகர் 5-வது பிரதான வீதியில் சாக்கடை கால்வாயை முறையாக தூர்வாராததால் சாக்கடை கழிவுநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோரும், மக்கள் பாதுகாப்பு அமைப்பினரும் நேற்று காலையில் அங்கு கூடினார்கள். பின்னர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி, சிலர் சாக்கடை கால்வாய்க்குள் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
பவானிநகர் பகுதியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி முழுவதும் எந்த அடிப்படை வசதியும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. தற்போது 5-வது பிரதான வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் முழுவதுமாக அங்கு தேங்கி நிற்கிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதிகாரிகளும் இதை கண்டுகொள்ளாமலே இருந்து வருகின்றனர். இதனால் உடனடியாக சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் பின்னர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அந்த சாக்கடை கால்வாயை சுத்தம் செய்தனர்.