கந்தர்வகோட்டை அருகே சொத்து தகராறில் வாலிபர் அடித்துக்கொலை அண்ணனுக்கு வலைவீச்சு

கந்தர்வகோட்டை அருகே சொத்து தக ராறில் வாலிபரை அடித்துக்கொன்ற அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-04-26 22:30 GMT
கந்தர்வகோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டையை சேர்ந்தவர் வேம்பையன். இவரது மகன் மனோகரன் (வயது 25). இவரது அண்ணன் மதி என்ற கருப்பையன். இவர்கள் 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அண்ணன்-தம்பி இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.

கடந்த 21-ந் தேதி மனோகரனுக்கும், மதிக்கும் சொத்தை பிரிப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மதி உருட்டு கட்டையால் தனது தம்பி மனோகரனை அடித்தார். இதில் மனோகரன் படுகாயமடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் படுகாயமடைந்த மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மனோகரன் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மனோகரன் மனைவி அம்பிகாபதி கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து, மனோகரனை உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்த அண்ணன் மதி என்ற கருப்பையனை வலைவீசி தேடி வருகின்றார். கொலை செய்யப்பட்ட மனோகரனுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்