எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் பிளஸ்-1 சேர்க்கையை அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும் முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளிலேயே அரசு பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கையை தொடங்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உஷா, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.;
நாமக்கல்,
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதன் பிறகு மாணவர்கள் சேர்க்கை விவரம் மற்றும் நடப்பாண்டில் பள்ளியின் செயல்திட்டம் ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பேசியதாவது:-
அரசு பள்ளிகளில் நன்கு படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களிடம் இலவசமாக கல்வியை வழங்குவதாக கூறி தனியார் பள்ளிகள் போட்டி போட்டுக்கொண்டு பிளஸ்-1-ல் சேர அழைப்பு விடுக்கின்றன.
இதனால் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தனியார் பள்ளிக்கு சென்றுவிடுகின்றனர். அதை தவிர்க்கும் விதத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளிலேயே தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கையை தொடங்க அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் அந்தந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் பேசி பிளஸ்-1 சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.