கெலமங்கலம் அருகே 300 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா
கெலமங்கலம் அருகே 300 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா நடைபெற்றது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே டி.கொத்தபள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற தர்மராஜ சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் தேர்த்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
இந்தநிலையில் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கெலமங்கலம், ராயக்கோட்டை, சூளகிரி, ஓசூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து கொண்டு வரப்பட்டன.
பின்னர் காளைகள் மைதானத்தில் அவிழ்த்து விடப்பட்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. அப்போது காளைகள் மைதானத்தில் துள்ளிக் குதித்து புழுதியை கிளப்பியபடி சென்றன. சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை மாடு பிடி வீரர்களும், இளைஞர்களும் விரட்டி சென்றனர். மேலும் காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசு பொருட்களையும், வண்ண பதாகைகளையும் பறித்தனர். அதில் சிலர் கீழே விழுந்தும், மாடுகள் முட்டியும் லேசான காயம் அடைந்தனர். இந்த விழாவை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம், நீர்மோர், உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.