கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்து கிடக்கும் மண்ணால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்து கிடக்கும் மண்ணால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2019-04-26 22:00 GMT
போடிபட்டி, 

கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது உடுமலை நகரம். இதனால் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த நெடுஞ்சாலையின் வழியாக உடுமலை நகரை கடந்து செல்கின்றன. இந்த நிலையில் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை ஐஸ்வர்யா நகர் பகுதியில் ரோட்டின் பாதியளவுக்கு மணல் குவிந்துள்ளது. இதனால் மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர், சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் “உடுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக கோடைமழை பெய்து வருகிறது. இவ்வாறு மழை பலமாக பெய்யும்போது ரோடு மற்றும் தெருக்களில் செல்லும் மழை நீர் எளிதாக வெளியேறி நீர்நிலைகளில் கலக்கும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த மழைநீர் வடிகால்கள் குப்பைகளாலும் ஆக்கிரமிப்புகளாலும் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடுமலை ஐஸ்வர்யா நகர் பகுதியிலிருந்து வெளியேறும் மழைநீர் தேசியநெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த சிறுபாலத்தின் கீழ் புகுந்து வெளியேறும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த மழைநீர் வடிகால் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது.

இதனால் மழைநீர் வெளியேறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மழைநீர் தேசிய நெடுஞ்சாலையில் ஆறு போல ஓடுகிறது. இதையடுத்து மழைக்காலங்களில் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் மழை நீரில் ஊர்ந்து நனைந்து செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் நீரோட்டத்தின்போது ரோட்டின் கரைகளிலுள்ள மண் அரித்து வரப்பட்டு ரோட்டில் குவிக்கப்படுகிறது. இதனால் மழை நின்றாலும் வாகன ஓட்டிகளுக்கு பிரச்சினை தொடர் கதையாகவே உள்ளது.

இந்த ரோட்டில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்பாராமல் மணல் குவியலில் செல்லும் நிலை ஏற்படும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறுகிறது. இதனால் சறுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது. மேலும் இந்தப்பகுதியை கனரக வாகனங்கள் கடக்கும்போது ஏற்படும் புழுதியால் பின்னால் வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்படுகிறது.

மேலும் அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையாக இருப்பதால் இரவு நேரங்களில் மணல் குவியலில் தடுமாறும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களில் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே தேசிய நெடுஞ்சாலையில் குவிந்துள்ள மணல் குவியலை அப்புறப்படுத்தவும் மீண்டும் மணல் குவியல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

மேலும் செய்திகள்