அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளை சேர்க்க ஆசிரியைகள் ஆர்வம் வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரம் வழங்கினர்
அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளை சேர்க்க வீதி வீதியாக ஆசிரியைகள் சென்று துண்டு பிரசுரம் வழங்கினார்கள்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளிவந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழக அளவில் தேர்ச்சி விகிதத்தில் 2-வது இடத்தை ஈரோடு மாவட்டம் பிடித்து இருக்கிறது. இதில் அரசு பள்ளிக்கூடங்களின் பங்கும் சிறப்பாக உள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வியின் தரம், அரசின் சலுகைகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூட ஆசிரியைகள் வீதி வீதியாக சென்று ஆர்வத்துடன் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்.
பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.சுமதி தலைமையில் ஆசிரியைகள் ரூபி, லதா, மல்லிகா, உமாமகேஸ்வரி, அமுதா, பிரின்சஸ் ஆகியோர் ஈரோடு சூரம்பட்டி 4 ரோடு, கிராமடை, அண்ணாநகர், ஸ்டோனிபாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார்கள். மேலும், அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ- மாணவிகளை சேர்க்கும் வகையில் அரசு வழங்கும் இலவச திட்டங்கள் குறித்தும் எடுத்துக்கூறினார்கள்.
இதுகுறித்து தலைமை ஆசிரியை கே.சுமதி கூறியதாவது:-
அரசு பள்ளிக்கூடங்களிலும் சிறப்பான கல்வி வழங்கப்பட்டு வருகிறது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், எங்கள் பள்ளிக்கூடத்துக்கு மாணவ-மாணவிகளை சேர்க்கும் வகையிலும் ஆண்டுதோறும் எங்கள் பள்ளி ஆசிரியைகள் மாணவர் சேர்க்கை துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு எங்கள் பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்புவரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ் வழி மட்டுமின்றி அனைத்து வகுப்புகளும் ஆங்கில வழியிலும் கற்பிக்கப்படுகின்றன. எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் அரசு அறிவித்த நாளில் இருந்து எந்த இடையூறும் இன்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பள்ளிக்கூடத்துக்கு மாணவர் சேர்க்கையும் அதிகரித்து உள்ளது. எனினும், இந்த சுற்றுவட்டார மாணவ-மாணவிகளை அரசு பள்ளிக்கூடத்தில் சேர்க்க விரும்பும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பிரசாரத்தை மேற்கொண்டு இருக்கிறோம். அரசு வழங்கும் திட்டங்களுடன் தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், நன்கொடையாளர்கள் மூலம் பல்வேறு பயிற்சி மற்றும் உபகரணங்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வருகிறோம் என்பதையும் பெற்றோரிடம் எடுத்துக்கூறி எங்கள் பள்ளிக்கூடத்துக்கு மாணவர் சேர்க்கை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு பள்ளிக்கூடங்களில் இருந்தும் ஆசிரிய-ஆசிரியைகள் வீதி வீதியாக சென்று மாணவர்களை சேர்த்து வருகிறார்கள்.