நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் நுழைவு சீட்டில் தவறுகள் இருந்தால் சரி செய்து கொள்ளலாம் முதன்மை கல்வி அலுவலர் தகவல்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் நுழைவு சீட்டில் தவறுகள் இருந்தால் சரி செய்து கொள்ளலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-26 22:30 GMT

திருவண்ணாமலை, 

இந்தியா முழுவதும் தேர்வுகள் முகமை மூலம் நீட் தேர்வுகள் வருகிற 5–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி, மாநகராட்சி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிளஸ்–2 தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.

இந்த தேர்விற்கான நுழைவுச்சீட்டு கடந்த மாதம் 15–ந் தேதி முதல் பதிவிறக்கும் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்து இருந்தது. அவ்வாறு பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டினில் ஏதேனும் விவரங்கள் சரியாக இல்லையெனில் இந்த நுழைவுச் சீட்டின் நகலினை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்படைக்கப்பட்ட நுழைவுச் சீட்டினை ஜெராக்ஸ் எடுத்து அந்த நகலினை பள்ளி இணை இயக்குனரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நுழைவுச் சீட்டின் நகலானது தேசிய தேர்வுகள் முகமைக்கு அனுப்பப்பட்டு நுழைவுச் சீட்டில் உள்ள தவறான விவரங்கள் சரி செய்யப்படுவதற்கு ஆவன செய்யப்படும். மாணவர்கள் நுழைவுச் சீட்டின் நகலினை ஒப்படைத்த மறு நாளில் இருந்து நுழைவுச் சீட்டின் விவரங்கள் சரி செய்யப்பட்டு உள்ளதா? என பார்த்து, அந்த நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

இந்த தகவலை முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்