ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் முதலைகள் சுற்றுலா பயணிகள் பீதி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குட்டிகளுடன் முதலைகள் சுற்றித்திரிவதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.;
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது. இதனிடையே மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கனஅடியாக குறைந்தது.
இந்தநிலையில் தொங்கு பாலம் கோத்திக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் 10–க்கும் மேற்பட்ட முதலைகள் குட்டிகளுடன் சுற்றித்திரிகின்றன. மேலும் குட்டிகள் தனியாக உலா வருகின்றன. காவிரி ஆற்றில் முதலைகள் சுற்றி உலா வந்ததை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், கோடை விடுமுறையொட்டி ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பின்னர் கோத்திக்கால் வழியாக காவிரி ஆற்றில் பரிசலில் செல்கின்றனர். தற்போது முதலைகள் அந்த பகுதியில் குட்டிகளுடன் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.
எனவே காவிரி ஆற்றில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் முதலைகளை பிடித்து ஒகேனக்கல்லில் உள்ள முதலை பண்ணையில் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.