உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியீடு அடுத்த மாதம் 2–ந்தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் விவர பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அடுத்த மாதம் 2–ந்தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

Update: 2019-04-26 22:45 GMT

தர்மபுரி,

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய ஊராட்சி உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதேபோன்று நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் விவரப்பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல்கள் மாவட்ட தேர்தல் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

தர்மபுரி நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்குரிய தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வெளியிடப்பட்டு உள்ளன. பொதுமக்களோ, தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களோ அல்லது அரசியல் கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகளோ இதுதொடர்பாக தங்கள் கருத்துக்கள், மறுப்புக்களையோ தெரிவிக்கலாம்.

கருத்துக்களையோ, மறுப்புகளையோ தெரிவிக்க விரும்புவோர் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வருகிற மே மாதம் 2–ந்தேதிக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்