வருமான வரி தாக்கல் செய்யாத தொழில் அதிபருக்கு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு
வருமான வரி தாக்கல் செய்யாத தொழில் அதிபருக்கு ஜெயில் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை,
தென்மும்பை பகுதியில் பரேஷ் ஷா என்ற தொழில் அதிபர் நகை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2014-15-ம் ஆண்டுக்கான வருமான வரி விவரத்தை தாக்கல் செய்யவில்லை. இது குறித்து வருமான வரித்துறை விளக்கம் கேட்டும் அவர் முறையான பதில் அளிக்கவில்லை.
எனவே வருமான வரித்துறை, தொழில் அதிபர் மீது வழக்கு தொடர்ந்தது.
ஜெயில் தண்டனை
இந்த வழக்கின் விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது தொழில் அதிபர், வழக்கமாக வருமான வரி தாக்கல் செய்யும் எங்கள் ஊழியர் வேலையைவிட்டு சென்றுவிட்டார். எனவே தான் வருமான வரி தாக்கல் செய்ய முடியவில்லை என கோர்ட்டில் விளக்கம் அளித்தார். எனினும் அவரது விளக்கத்தை ஏற்க கோர்ட்டு மறுத்துவிட்டது.
இதையடுத்து கோர்ட்டு வருமான வரி தாக்கல் செய்ய தவறிய தொழில் அதிபர் பரேஷ் ஷாவுக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.
மேலும் செலுத்த தவறிய வருமான வரியை வட்டி, அபராதத்துடன் கட்ட உத்தரவிட்டது.