ஒடிசாவில் பிரதமரின் ஹெலிகாப்டரில் சோதனை: ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி இடை நீக்கத்திற்கு தடை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு
ஒடிசாவில் பிரதமரின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய விவகாரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணிஇடைநீக்கத்திற்கு தடை விதித்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்காக பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாடு முழுவரும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஒடிசா மாநிலத்தில் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் வந்தார்.
அப்போது அங்கு தேர்தல் பார்வையாளர் பணியில் ஈடுபட்டிருந்த கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி முகமது மொகிசின், பிரதமரின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தினார்.
பணி இடைநீக்கம்
சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பில் உள்ள தலைவர்களின் வாகனங்களில் சோதனை நடத்த விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதை மீறி தேர்தல் பார்வையாளர் பிரதமரின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தியது தவறு என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.
மேலும், இதற்காக முகமது மொகிசினை பணி இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இடைக்கால தடை
இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள பணி இடைநீக்க ஆணையை ரத்து செய்ய கோரி பெங்களூருவில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாய கோர்ட்டில் முகமது மொகிசின் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.
மனுவை விசாரித்த நீதிபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரி முகமது மொகிசின் பணி இடைநீக்க ஆணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அவர் உடனடியாக ஏற்கனவே பணியாற்றிய துறையில் பணியில் சேரும்படி அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.