மந்திரி எம்.பி.பட்டீலை தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது

இந்து தர்மத்தை அழிக்க நினைப்பவர் என கூறி சமூக வலைத்தளங்களில், மந்திரி எம்.பி.பட்டீலை தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-25 22:48 GMT
பெங்களூரு,

தார்வார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரசைச் சேர்ந்த மந்திரி எம்.பி.பட்டீல் மற்றும் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி ஆகியோரை தரக்குறைவாக விமர்சித்து ஒரு இளம்பெண் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் முதலில் லிங்காயத் சமுதாயத்தைப் பற்றி மந்திரி எம்.பி.பட்டீலும், வினய் குல்கர்னியும் பேசுவது போன்றும், பின்னர் அவர்கள் 2 பேரையும் விமர்சித்து அந்த பெண் பேசுவது போன்றும் அமைந்திருக்கிறது.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் அந்த இளம்பெண் பேசுவது பற்றிய விவரம் வருமாறு:-

எம்.பி.பட்டீல் மறுப்பு

நான் இந்திய நாட்டின் பெண். மேலும் இந்து வீரசைவ-லிங்காயத் சமுதாய தர்மத்தைச் சேர்ந்த இளம்பெண். மந்திரி எம்.பி.பட்டீல் மற்றும் வினய் குல்கர்னி ஆகியோர் நமது லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மந்திரி எம்.பி.பட்டீல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு, வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை பிரிக்க கோரி ஒரு கடிதம் எழுதி உள்ளார் என்று கூறப்படுகிறது. அது பகிரங்கமாக வெளியாகியும் உள்ளது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார். அது ஒரு போலியான கடிதம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த கடிதத்தில் வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைப்பதன் மூலம் நாட்டில் இந்து தர்மத்தை ஒழித்துவிட்டு, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக எம்.பி.பட்டீல் குறிப்பிட்டு இருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருத்தம் அளிக்கிறது

இந்து மக்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் எம்.பி.பட்டீல், இந்து தர்மத்தை ஒழித்துக்கட்ட முடிவு கட்டியுள்ளார். இதன்மூலம் இந்து தர்மத்தை அழித்துவிடலாம் என்று நினைக்கின்றார். எம்.பி.பட்டீலால் எடுக்கப்பட்ட இந்த முடிவு நாட்டை நாசமாக்கி விடும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக லிங்காயத் தர்மத்தை உடைத்து வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை பிரிக்க சில முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சங்கங்களுக்கு எம்.பி.பட்டீல் பணம் கொடுத்துள்ளார்.

நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்துத்துவா கொள்கைகளை காப்பாற்ற போராடி வருகிறது. அந்த அமைப்புக்கு பா.ஜனதா ஆதரவு இருக்கிறது. ஆனால் இங்கு லிங்காயத் சமுதாயத்தை பிரிக்க எம்.பி.பட்டீல் பாடுபட்டு வருவது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.

இளம்பெண் கைது

தேர்தலுக்கு முன்பே சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியாகி விட்டது. அதனால் இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. அவர்கள் இதுபற்றி தார்வார் டவுன் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வீடியோவை வெளியிட்ட இளம்பெண் யார் என்று விசாரித்தனர்.

அப்போது அவர் தார்வார் மாவட்டம் கரக கிராமத்தில் வசித்து வரும் சுருதி பெலக்கி(வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் சுருதி பெலக்கியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்