தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உடல் சிதறி சாவு

பீளமேடு-இருகூர் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உடல் சிதறி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-04-25 22:30 GMT
கோவை,

கோவை பீளமேடு கருப்பண்ணா கவுண்டர் லே- அவுட்டை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் பிரியா (வயது 18). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தனது வீட்டில் இருந்து நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்டார். அப்போது பீளமேடு-இருகூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றதாக தெரிகிறது.

அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பிரியா பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் அங்கு சிதறிக்கிடந்த பிரியாவின் உடல் பாகங்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:- தண்டவாளத்தை கடக்கும் போது இருபுறமும் பார்த்து கவனத்துடன் கடக்க வேண்டும். முடிந்தவரை ரெயில்வே தண்டவாளத்தை கடப்பதை தவிர்க்க வேண்டும்.

ரெயில் தூரத்தில் தானே வருகிறது. அதற்குள் நாம் தண்டவாளத்தை கடந்துவிடலாம் என்று நினைக்க கூடாது. பொறுமையாக, அவசரம் இல்லாமல், ரெயில்வே கேட் உள்ள பகுதிக்கு சென்று எளிதாக தண்டவாளத்தை கடந்து செல்லலாம். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடையே அதிகளவு விழிப்புணர்வு தேவை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்