உடுமலையில் கோவிலில் பூட்டை உடைத்து குத்துவிளக்குகள் திருடியவர் கைது

உடுமலையில் கோவிலில் பூட்டை உடைத்து குத்துவிளக்குகளை திருடிச்சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-25 22:30 GMT
உடுமலை,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உடுமலை-தளி சாலையில் 24 மனை தெலுங்கு செட்டியார் வகையறாவிற்கு சொந்தமான காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருபாகரன் என்பவர் பூசாரியாக இருந்து வகிறார். இவர் தினமும் காலை 6 மணிக்கு கோவிலை திறந்து பூஜை செய்வது வழக்கம். பின்னர் இரவு 8.30 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விடுவார்.

இதுபோல் கடந்த 22-ந் தேதி இரவு கோவிலை பூட்டிவிட்டு பூசாரி வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பித்தளை குடம்-3, செம்பு-1, பெரிய குத்துவிளக்கு -1, மூன்று தீபங்கள் கூடிய குத்துவிளக்கு-1, வெள்ளிசெம்பு-2 ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. மேலும் கோவில் வளாகத்தில் நிறுத்தியிருந்த மொபட்டையும் காணவில்லை.

இதுகுறித்து கோவில் தலைவர் ரங்கசாமி உடுமலை போலீசில் புகார் செய்தார். இதையொட்டி மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள், சப்- இன்ஸ்பெக்டர் சக்திவடிவேல், ஏட்டு நாகராஜ், போலீசார் செல்வகணேஷ், நல்லபெருமாள், கவிதாமணி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர துப்பு துலக்கிவந்தனர்.

இந்த திருட்டு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் ஜமனாம்பட்டியை சேர்ந்த ஜீவா என்கிற சிவா (வயது 38) என்பவரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், அவர் மறைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து கோவிலில் திருட்டு போன பூஜை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். அத்துடன் மொபட்டும் கைப்பற்றப்பட்டது. கோவிலில் பூஜை பொருட்களை திருடியவரை போலீசார் 2 நாட்களில் கைது செய்து பூஜை பொருட்களை மீட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்