பவானி பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன
பவானி பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
பவானி,
ஈரோடு மாவட்டத்தில் கடும் வெயில் அடித்து வந்தது. கடந்த சில தினங்களாக ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் அவ்வப்போது பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.
பவானி அருகே உள்ள சின்னப்புலியூரில் நேற்று முன்தினம் பகல் முழுவதும் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் இரவு 9 மணிக்கு மேல் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. அதன்பின்னர் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இதேபோல் வைரமங்கலம், தளவாய்பேட்டை, ஜம்பை, விருமாண்டாம்பாளையம் போன்ற பகுதிகளிலும் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.
இந்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சின்னப்புலியூர், விருமாண்டாம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தோட்டங்களில் பூவன் வாழை சாகுபடி செய்திருந்தோம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பவானி பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்துவிட்டன. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.