சேலம் பள்ளப்பட்டியில் ஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை

சேலம் பள்ளப்பட்டியில் ஜாமீனில் வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-04-25 22:00 GMT
சேலம், 

சேலம் பள்ளப்பட்டி ராவனேஸ்வரா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி ஜெயா. இவர்களுடைய இளைய மகன் கோபி (வயது 22). இவருக்கு மது பழக்கமும், கஞ்சா பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. ராஜேந்திரன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து ஜெயா மூத்த மகனுடன் ஆட்டையாம்பட்டியில் வசித்து வருகிறார். அதே நேரத்தில் இளைய மகன் கோபி தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

கோபி ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த பெண் சிறிது காலத்திற்கு பின்னர் தொடர்ந்து காதலிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபி வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு கோபி வழக்கம்போல் மதுகுடித்து விட்டு வீட்டில் தூங்கினார். இந்தநிலையில் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அவருடைய அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் குடும்பத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே பார்க்கும் போது கோபி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கோபி காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? குடும்ப பிரச்சினை காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட கோபி, சமீபத்தில் அடிதடி வழக்கு ஒன்றில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்