முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் முன்பு ரூ.38 கோடியில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணி தொடங்கியது

திருச்சி முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் முன்பு ரூ.38¾ கோடியில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதற்காக பிரத்யேக எந்திரங்கள் வரவழைக்கப்படுகிறது.

Update: 2019-04-25 22:45 GMT
ஜீயபுரம்,

திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் முக்கொம்பு சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உருவாகும் காவிரி தமிழகத்தில் மேட்டூருக்கு வந்து திருச்சி முக்கொம்பு வரை ஒரே காவிரியாக வருகிறது. முக்கொம்பில் இருந்து காவிரி, கொள்ளிடம் என இரு நதிகளாக பிரிகிறது.

முக்கொம்பு மேலணையில் தண்ணீர் சேமிக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கட்டுக்கடங்காத வெள்ளம் வரும் காலங்களில் காவிரியில் இருந்து உபரிநீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்படும். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து 3 நாட்களுக்கு மேலாக 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் கொள்ளிடம் வழியாக வெளியேற்றப்பட்டது.

இதனால் பழமை வாய்ந்த கொள்ளிடம் தடுப்பணை ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி இரவு உடைந்தது. இதில் கொள்ளிடம் கதவணையின் 6 முதல் 14 வரையுள்ள 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அணை உடைந்த இடத்தில் புதிதாக ரூ.387 கோடியே 60 லட்சம் செலவில் புதிய கதவணை கட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த பணியை கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். புதிய கதவணையை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அங்கு நிலத்தின் தன்மைக்கு ஏற்ப மண்பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையே புதிய கதவணை கட்டுவதற்கு முன்பாக கொள்ளிடத்தில் வீணாகும் நீரை தடுத்து நிறுத்த ரூ.38 கோடியே 85 லட்சத்தில் தற்காலிக தடுப்பணை கட்டும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. இந்த தடுப்பணை கட்டப்பட்டால் வரும் ஆகஸ்டு மாதம் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டால் அது வீணாகாமல் தடுக்கப்படும்.

எனவே தற்காலிக தடுப்பணையை இன்னும் 3 மாதத்தில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக சீனாவில் இருந்து இரும்பு தகடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் எடை ஒரு டன் இருக்கும். இந்த இரும்பு தகடுகள் புதிதாக அணை அமையும் இடத்தில் 12 மீட்டர் ஆழத்துக்குள் புதைக்கப்பட்டு தரை மட்டத்தில் இருந்து மேலும் 3 மீட்டர் உயரத்துக்கு நிறுவப்படும்.

மணற்பாங்கான இடத்தில் அணை அமைவதால் அடித்தளத்தை பலப்படுத்த இரும்பு தகடு பதிக்கப்படுகிறது. அணைக்கான தூண்கள் அமைப்பதற்கான பணிகள் ராட்சத எந்திரங்கள் மூலம் தொடங்கப்பட்டு விட்டன. மேலும் பிரத்யேக எந்திரங்கள் வரவழைக்கப்படுகிறது.

புதிதாக அணை அமையும் பகுதியில் 15 மீட்டர் ஆழத்தில் மணலும், அடுத்த 7 மீட்டரில் மிதமான பாறையும், அடுத்த நிலையில் மிக கடினப்பாறையும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கு ஏற்ப 22 மீட்டர் ஆழத்துக்கு கீழ் கடினப்பாறையில் இருந்து கட்டுமான பணி தொடங்கும் வகையில் அடித்தளம் அமைக்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்