வாழப்பாடி அருகே பன்றி, நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற கணவன்-மனைவி கைது

வாழப்பாடி அருகே பன்றி, நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-25 22:00 GMT
வாழப்பாடி,

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 32). தொழிலாளி. இவருக்கு சொந்தமான 5-க்கும் மேற்பட்ட ஆடுகளை, சில நாய்கள் கடித்து கொன்றதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் இதேபோல ஒரு ஆடு செத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் அவரது மனைவி ஆனந்தி ஆகியோர் சேர்ந்து இறைச்சியில் விஷத்தை கலந்து சிங்கிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் வீசியதாக கூறப் படுகிறது.

இந்த நிலையில் விஷம் கலந்த இறைச்சியை சாப்பிட்ட பன்றிகள், நாய்கள், பூனைகள், கோழிகள் மற்றும் காக்கைகளும் செத்தன. சுமார் 50-க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் செத்து கிடந்ததால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கால்நடை டாக்டர்கள் உதவியுடன் செத்து கிடந்த விலங்குகள், பறவைகளை பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், குமார், ஆனந்தி ஆகியோர் சேர்ந்து விஷம் வைத்து விலங்குகள், பறவைகளை கொன்றது தெரியவந்தது.

பின்னர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார் குமார், அவரது மனைவி ஆனந்தி (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்