தேன்கனிக்கோட்டை பகுதியில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தேன்கனிக்கோட்டை பகுதியில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா பென்னங்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த விற்பனை நிலையங்களுக்கு வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப வருபவர்களில் பெரும்பாலானவர்கள், ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை கொடுத்து பெட்ரோல் நிரப்பி செல்கிறார்கள்.
இந்த நிலையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கொடுக்கப்படும் ரூ.200 நோட்டுகள் பல கள்ள நோட்டுகளாக உள்ளதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதே போல தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து காவல் துறை நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.