ஆழ்வார்குறிச்சி அருகே பெண் கொலையில் உறவினர் கைது
ஆழ்வார்குறிச்சி அருகே பெண் கொலையில் அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.;
கடையம்,
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் புதுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் மனைவி கல்யாணி (வயது 44). இவருக்கும், அக்காள் ஈஸ்வரி, அவருடைய மகள் இசக்கியம்மாள் ஆகியோருக்கும் இடையே குழாயில் தண்ணீர் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் இதே பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கல்யாணி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கியம்மாளின் கணவர் கருப்பசாமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொட்டல்புதூரில் பதுங்கி இருந்த கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக என்னுடைய மாமியார், மனைவியிடம் கல்யாணி அடிக்கடி தகராறு செய்து வந்தார். மீண்டும் ஏற்பட்ட தகராறில் எனது மனைவி இசக்கியம்மாளை அவதூறாக பேசினார். இதுகுறித்து நான் கல்யாணியிடம் தட்டிக்கேட்டேன். இதனால் எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நான் கல்யாணியை அரிவாளால் வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். நான் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டேன். போலீசார் என்னை தேடிப்பிடித்து கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.