ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம்: மத்திய சுற்றுச்சூழல் அதிகாரி தூத்துக்குடியில் திடீர் ஆய்வு

தூத்துக்குடி சிப்காட்-2 மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-04-24 22:30 GMT
தூத்துக்குடி, 

நெல்லை சங்கர்நகரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன் என்பவர் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பி இருந்தார். அந்த மனுவில், தூத்துக்குடியில் 1,616 ஏக்கர் பரப்பில் சிப்காட்-2 அமைப்பதற்காக சிப்காட் நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு அனுமதி கோரி சுற்றுச்சூழல் துறையில் விண்ணப்பித்து இருந்தது. அதற்காக கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

சிப்காட் அமைப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம், நகர-ஊரக வளர்ச்சித்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அதன்பிறகு சிப்காட் செயல்படுவதற்கான மற்றொரு அனுமதியை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற வேண்டும். அதன்பிறகே தொழிற்சாலைகளுக்கு நிலத்தை வழங்க வேண்டும். ஆனால், சிப்காட்-2 அமைப்பதற்கான எந்த அனுமதியும் பெறுவதற்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலைக்கு 324 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனம் அங்கு விரிவாக்க பணிகளையும் தொடங்கி உள்ளது.

இதனால் சிப்காட்-2 விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டு உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட சிப்காட் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இந்த புகார் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ஒரு குழுவை அமைத்து உள்ளது. அதன்படி, மத்திய சுற்றுச்சூழல்துறை தென்மண்டல அலுவலக இயக்குனர் கலியபெருமாள், ஆராய்ச்சியாளர் பிரிஜிலால் ஆகியோர் நேற்று திடீரென தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்களுடன் தூத்துக்குடி சிப்காட் திட்ட அலுவலர் லியோ வாஸ், மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ராம்மோகன், புகார்தாரர் முத்துராமன் ஆகியோர் சிப்காட்-2 பகுதியை பார்வையிட்டனர். இதில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதியையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஒவ்வொரு பகுதியையும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு சிப்காட்-2 தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதையொட்டி அங்கு புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல்துறை தென்மண்டல அலுவலக இயக்குனர் கலியபெருமாள் கூறியதாவது:-

முத்துராமன் அளித்த புகாரின்பேரில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தென்மண்டல அலுவலகத்தில் இருந்து வந்து உள்ளோம். சிப்காட் 2-க்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை ஆய்வு செய்வதற்காக வந்தோம். இங்கு என்னென்ன பணிகள் நடந்து உள்ளது என்பதை ஆய்வு செய்து உள்ளோம்.

கட்டிட அடித்தளம் அமைக்கும் பணி, மின்சார அலுவலகம், காவலர்கள் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது எந்தவிதமான பணிகளும் நடைபெறவில்லை. இதனை நாங்கள் முழுமையாக புகைப்படம் எடுத்து உள்ளோம். இந்த அறிக்கையை டெல்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் சமர்ப்பிப்போம். அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்