தம்பியை தி.மு.க. பிரமுகர் சுட்டுக்கொன்ற வழக்கு: மேலும் 4 பேர் கைது; துப்பாக்கி-கார் பறிமுதல்
தூத்துக்குடியில் தம்பியை தி.மு.க. பிரமுகர் சுட்டுக்கொன்ற வழக்கில், மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி-கார் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் ஜேசு. இவருடைய மகன் பில்லா ஜெகன் (வயது 45). இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராகவும், விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவராகவும் உள்ளார்.
இவருக்கும், இவரது தம்பி சிமன்சனுக்கும் (32) சொத்தை பிரிப்பதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 22-ந் தேதி நள்ளிரவில் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பில்லாஜெகன், தம்பி சிமன்சனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தனது கூட்டாளிகளுடன் காரில் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் வைத்து பில்லாஜெகனை கேரளா போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் நேற்று தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி சிமன்சன் தகராறு செய்து வந்ததாகவும், இதனால் அவரை நாட்டு கைத்துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்தது. இந்த துப்பாக்கியை பில்லாஜெகன் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகரிடம் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாங்கியதும் தெரியவந்தது. இதனால் அந்த பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக பில்லாஜெகனின் கூட்டாளிகள் தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன் என்ற தம் மணிகண்டன் (36), மாதாநகரை சேர்ந்த அய்யாகண்ணு மகன் ரங்கநாதகண்ணன் (37), வல்லநாடு கீழத்தெருவை சேர்ந்த சுப்பையாபாண்டியன் மகன் பண்டாரம் என்ற பாண்டி, செங்கோட்டையை சேர்ந்த வேல்சாமி மகன் முத்துப்பாண்டி (39) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் ஒரு தோட்டா, கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட பில்லா ஜெகன் உள்பட 5 பேரும் நேற்று மாலையில் தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 8-ந் தேதி வரை ஜெயிலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில், அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்