புதுச்சேரியில் ரவுடியை வழிமறித்து கொல்ல முயன்ற சம்பவம் - விழுப்புரம் கோர்ட்டில் 3 பேர் சரண்

புதுச்சேரியில் ரவுடியை வழிமறித்து கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக விழுப்புரம் கோர்ட்டில் 3 பேர் சரண் அடைந்தனர்.

Update: 2019-04-24 22:45 GMT
விழுப்புரம்,

கடலூர் முதுநகரை சேர்ந்த ராம்பிரசாத்தை கடந்த 2016-ம் ஆண்டு பாகூர் முள்ளோடை மதுக்கடையில் வைத்து கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த அருள், சுந்தர், பாலகிருஷ்ணா ஆகியோர் வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் கைதான 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்காக ஆஜராகி வந்தனர்.அதன்படி கடந்த 22-ந் தேதி புதுச்சேரி கோர்ட்டில் ரவுடி அருள் ஆஜராகி விட்டு தனது நண்பர்களுடன் கடலூர் திரும்பினார். புதுச்சேரி அரியாங்குப்பம் புதுப்பாலத்தில் 6 பேர் கொண்ட கும்பல் திடீரென அருளையும், அவரது நண்பர்களையும் வழிமறித்து தாக்கியது. இதில் அருள், ஆற்றில் குதித்து உயிர் தப்பினார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி அரியாங்குப்பம் போலீசார், கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து 6 பேரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த செல்வம் மகன் கார்த்திக் (வயது 25), நாகப்பன் மகன் மணிபாலன் (27), சுப்பிரமணி மகன் சுபாஷ் (23) ஆகியோர் நேற்று காலை விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து நீதிபதி மும்தாஜ் உத்தரவின்பேரில் 3 பேரும் விழுப்புரம் வேடம்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்