கால்கள் சீரான வளர்ச்சி பெறாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பிரத்யேக காலணி - கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு

தேனியில் கால்கள் சீரான வளர்ச்சி பெறாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பிரத்யேக காலணி வடிவமைத்து கொடுக்கப்பட்டன.;

Update: 2019-04-24 22:00 GMT
தேனி,

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து வழிகாட்டுதலின் படி, மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, கால்கள் சீரான வளர்ச்சி பெறாத மாற்றுத்திறனாளிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 2 கால்களில் ஒரு கால்கள் சற்று உயரம் குறைவாக உள்ளதால் நடப்பதில் சிரமங்களை சந்தித்து வந்தனர். மற்றவர்களை போல் இயல்பாக நடக்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.

இதையடுத்து இவர்களுக்கு பிரத்யேக காலணி வடிவமைத்து கொடுத்தால் அவர்களால் மற்றவர்களை போல் இயல்பாக நடக்க முடியும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்பேரில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் மூலம், இதுபோன்ற மாற்றுத்திறன் கொண்ட 29 மாணவ, மாணவிகளுக்கு பிரத்யேக காலணி வடிவமைத்து கொடுக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக கோவையை சேர்ந்த ஒரு காலணி உற்பத்தி நிறுவனத்தை கல்வித்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினர். அதன்பேரில் கோவை நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் தேனிக்கு நேற்று வந்தனர். அவர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளாக அடையாளம் காணப்பட்ட 29 மாணவ, மாணவிகளுக்கும் காலணி தயாரித்து கொடுக்க சிறப்பு முகாம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர்கள் 8 பேர் பங்கேற்று மாணவ, மாணவிகளின் இரு பாதங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அளவிட்டனர். அதன்பேரில், ஒரு காலணி உயரம் குறைவாகவும், மற்றொரு காலணி உயரம் சற்று அதிகமாகவும் வடிவமைக்கப்பட்டது. சிறப்பு முகாமிலேயே இந்த பிரத்யேக காலணிகளை வடிவமைத்து கொடுத்தனர். இந்த சிறப்பு முகாமில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகலா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்