சேலம் அருகே 2 இடங்களில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

சேலம் அருகே 2 இடங்களில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-04-24 23:00 GMT
அயோத்தியாப்பட்டணம்,

சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி அருகே பருத்திக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தனர். இதற்கு அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் நேற்று காலை பருத்திக்காட்டில் சேலம்-அரூர் சாலை மற்றும் தாதனூர் பிரிவு ரோடு ஆகிய 2 இடங்களுக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையொட்டி வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவலறிந்த வீராணம் போலீசார், அயோத்தியாப்பட்டணம் வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

அப்போது அவர்களிடம் பொதுமக்கள் கூறும் போது, ‘எங்கள் பகுதியில் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. எனவே தண்ணீர் முறையாக வழங்கப்படும் என உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம்’ என்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்