உரம் தயாரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: சேலத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

உரம் தயாரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-24 22:45 GMT
சேலம்,

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் 5 இடங்களில் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளன. அஸ்தம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட பெரமனூர் கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியில் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில் இருந்து துர்நாற்றம் அதிகளவு வீசுவதால் இந்த மையத்தை இடமாற்றம் செய்யக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இந்த நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையம் தொடர்ந்து அங்கேயே செயல்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று சேலம் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர்.

பின்னர் அவர்கள் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதை மாற்றக்கோரியும் அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறும் போது, ‘உரம் தயாரிக்கும் மையம் தொடங்குவதற்கு முன்பே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். தற்போது இந்த மையத்தில் அழுகிய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வீட்டில் குடியிருக்க முடியவில்லை. மேலும் நாங்கள் தொற்றுநோய்க்கு ஆளாகி வருகின்றோம். எனவே இந்த மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று கூறினர்.

இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைதொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலினால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பாக பொதுமக்கள் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து பேசினர்.

மேலும் செய்திகள்